Saturday, December 4, 2010

மனம்

மறுபடி அடுக்கி நிமிர்வதற்குள்
 
மீண்டும்மொரு காற்று
 
மனமும் சீட்டடுக்கு மாளிகைதான் . . .

Friday, December 3, 2010

நான்

பிரிந்திருந்த ஐந்தாம் நாளில் 
 
மெல்ல முளைத்தது சோகம் 
 
முதன் முதலில் கண்ட காலங்கள் 
 
புன்னகை மட்டும் பரிமாறிக்கொண்ட நிமிடங்கள் 
 
மெல்லத் தொடங்கி 
 
தீவிரமாகத் தொட்டுக் கொண்ட நேரங்கள் 
 
இரண்டு நாள் செல்ல 
 
சோகம் நிறம் மாறி 
 
மூர்க்கத்துடன் காமம் 
 
எங்கோ நின்று அலைக்கும்
 
வீடு நோக்கித் திறந்து கிடந்தன கண்கள் 
 
கதவு திறந்து உள்ளே நுழையவும் 
 
என்னை பிடித்துக் கொள்கிறது
 
சுயமுனைப்புடன்
 
நான் போகும்போது விட்டுப்போன
 
நானென்னும் சுயம்.

விண்ணப்பம்

நடு இரவில் கண்விழிக்கும் போதும்

கொட்டும் மழையில் வீடு திரும்பும் போதும்

நாக்கில் காய்ச்சல் கசக்கும் போதும்

நாவலின் கடைசிப் பக்கம் வாசிக்கும் போதும்

ஜன்னல் இருக்கை ரயில் பயணத்திலும்

கர்ப்பக்கிரகத்திலிருந்து வெளிவந்தவுடனும்

உன் முகம் பார்க்கத்தான் வேண்டுகிறேன்

என்னோடே இருப்பாயா, எப்போதும்?

Thursday, December 2, 2010

"முடிவுகள் என்பவை சிந்திக்க இயலாமல் 
 
சோர்வடையும் பொழுது அறிவிக்கப்படுபவை "

Wednesday, December 1, 2010

கண்ணாடிச் சில்லுகள்


மௌனங்களுக்கூடாக
சிந்திக் கிடந்த வார்த்தைகள் 
வெப்பம் தாளாமல் 
சூடேறுகின்றன ...
மெலிதாக கைவிரல்கள்
நடுங்கியவன்னம்
தொலைபேசியின்
மறுமுனையிலிருந்து
பேசிக் கொண்டிருந்தேன்
நான் ...
பயணத்தில் எங்கோ
தொலைக்கப்பட்ட
பையில்
நமது  கடைசி
சந்திப்பின் போது
பரிமாறிய அன்பு
நொறுங்கிக் கிடக்கிறது
பிரிக்கப்படாத பிஸ்கட்டென ...
சில நிமிட
நல விசாரிப்புகளுக்குப் பிறகு 
மீண்டும் இடமாறிக்கொள்கிறோம்  
நாம் ...
இன்று
எனது கனவில்
மழைத்துளிகள்
விழுந்து நொறுங்கி

பாதையெங்கும்
பரவிக் கிடக்கின்றன
கண்ணாடிச்
 சில்லுகள் ...

மழை

நேற்று 
இப்படித்தான் இருந்தது 
இன்றும் 
இப்படியேதான் இருக்கிறது 
நாளையும் 
இப்படித்தான் இருக்கும் போல 
எது எப்படி இருந்தாலும் 
மழை எப்பொழுதும் போல் 
குளிர்வித்து விடுகிறது 
மண்ணையும் மனதையும் ....