Saturday, June 4, 2011

மிச்சம் !

சந்தர்பங்களின் சாத்தியத்திற்கு

உதவக்கூடுமென

சேருமிடத்தை மாற்றியவாறு

கணத்துக்கொண்டே போனது

ஓர் பயணம் …

எங்கும் இறங்க மனமின்றி

இருப்பின் தடயங்கள் ,

இழந்த இரவுகளை

எண்ணிக்கொண்டு

கிளம்பும் போதெல்லாம்

நினைவுகளை சுமந்து போகிற

ஏதேனுமொரு திசையில்

குறுக்கிடும் காகத்திற்கு

தெரியாது

எதிர்பார்புகளின் குவியலோடு

அலையும் வாழ்வு பற்றி

-கவிதா ரவீந்தரன்


நன்றி திண்ணை
http://puthu.thinnai.com/?p=632

Wednesday, May 25, 2011

இவைகள் !

ஒரு பறவையின் நீலச் சிறகு ...

இன்னும் உறுத்திக்கொண்டிருக்கும்

உன் பார்வை ...

அன்னியமாக உருக்காட்டி

மறையும் என்னுருவம் ...

தொலைந்த பயணத்தின்

தொடக்க நாட்கள் ...

கொஞ்சமும்

இங்கிதமற்ற முறையில்

சலனப்படும் மணம்..

நமக்கு நாமே

எழுதிக்கொண்ட ஓர் இரவு .....

பூட்டிய வீட்டின் முன்

விட்டெறிந்த கடிதம் ...

மற்றும்

என் வருகைக்காக

காத்து பதுங்கி

முகம் புதைத்திருக்கும்

கருப்பு நிற நாய்…

இவைகள் .,

இவைகள் மட்டும்தான்

இன்று எனக்கு சொந்தமானவை ....!

-கவிதா ரவீந்தரன்


நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311052218&format=html

Tuesday, May 17, 2011

புழுங்கும் மௌனம்!

ஒரு மௌனத்தை

எவ்வளவு நேரம் சுமப்பது

உன் பொய்களையும்

கனவுகளையும்

போதையாய்

புணர்ந்த வலிகளோடு ...

பெருத்த பாலைவனங்களில்

உடைந்த பீரங்கிகள்

சொல்லும் மௌனங்களை

உரசிப் பார்த்ததுண்டா நீ ?

முழுமையின் பிரவாகத்தில்

ஒரு புள்ளியை

தனக்குள் புதைத்து

புளுங்கியதுண்டா நீ ?

தனிமை குவிந்திருந்தும்

மேலோட்டமாய்

ஒரு இரைச்சலுக்குள்

சலனப்பட்டதுண்டா நீ ?

பாலைவனத்தின்

கள்ளிச் செடியில்

வடியும் ,

கடைசி சொட்டு

மௌனத்தை புசித்து செல் !

அல்லது

ஒரு ஆணின் செருக்கோடு

மௌனத்தின் முலைதேடு ...

உன் கர்வத்தின் மௌனத்திற்கு

பதில் சொல்வாள்

உன் தாய்

அல்லது உன் மகள் ...


- கவிதா ரவீந்தரன்



நன்றி
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=311051520&format=html

Monday, April 11, 2011

அவனுக்கு அவள் அந்நியமாய் ....

எழுத நினைத்து

எழுதாமல் விட்ட

எத்தனையோ

தருணங்களை

தணிக்கை

செய்யாமல்

முன்வைக்க

முடியுமா ....

அவனுக்கு

அவள் அந்நியமாய் ....

அவன்

தனது நிழலை

புணர்ந்து

கொண்டிருக்கிறான் ...

என் எழுத்தில்

என் குருதியின்

வாடையும்

சுவையும்

தெரிகிறதா

உனக்கு ?

உள் அதிர்வுகளை

உனக்கு

முத்தமாக

மாரித்தந்தேன்

உனது சிலிர்ப்பை

நீ கவிதைஎன்றாய்

நான் காதல் என்றேன்

அவ்வளவே ...

செல்லரித்து

சிதைந்த

விரிசலுற்றிருந்த

சுவரில் ...

கவிதை எழுதிக் கொண்டிருந்த

அவளை பார்த்து

பயங்கொண்டு ஓடியது

எட்டுக்கால் பூச்சி ...

கைக்கு சிக்கவில்லை

இருந்தும்

எழுதிகொண்டிருக்கிறது

இன்னுமொரு காதலுக்காக .....

Friday, April 8, 2011

யாருமற்ற சபையின் மௌனங்கள்..

தோல்விகளின் வரலாற்றை

நாம் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்

சமரசங்களின் மீது

நம்பிக்கையிழந்த அடையாளங்கள்

அதன் மேஜையில்..

நகக் கீறலின் வடுவைப் போல்

தங்கி விடுகிறது..

யாருமற்ற சபையின்

வனையப்பட்ட மௌனங்கள்..

சொற்ப சொற்களுடன் போரிடுகின்றன

யாவற்றையும்

குறிப்பெடுத்துக் கொள்ளும்படி..!

Wednesday, April 6, 2011

காலம்

நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ

நம்மிடம் இருப்பது மூன்று தெரிவுகள் தான்

நேற்று இன்று நாளை ....

மூன்று கூட இல்லை

ஏன்னென்றால்

தத்துவவாதிகள் சொல்வது போல

நேற்று என்பது நேற்றுதான்

அது நமது நினைவுகளில் மட்டுமே

தங்கிஇருக்கிறது

ஏற்கனவே பறிக்கப்பட்ட ரோஜாவிலிருந்து

விளையாடுவதற்கான சீட்டுக்கட்டுகள்

இரண்டு மட்டுமே உள்ளன ;

நிகழ்காலம் எதிர்காலம்

இல்லை

இரண்டு கூட இல்லை

ஏன்னென்றால்

நிகழ்காலம் என்பது

கடந்த காலத்தின் விளிம்பை

தொட்டுக் கொண்டிருக்கிறதே தவிர

அது ஒன்றும்

நிகழ்காலத்தில் இல்லை

இளமையை போல்

அதுவும் செலவாகிவிட்ட ஒன்று

கடைசியில் நம்மிடம் இருப்பது

எதிர்காலம் மட்டுமே

நான்

எனது மதுகோப்பையை

அந்த வராத நாளுக்காக

உயர்த்துகிறேன்

நம்மிடம்

இருப்பது

அது

மட்டும்தானே ?

Saturday, March 12, 2011

பசித்த வாடை..

எனது

விருப்பங்களின்

தசைநாரைப் பிளந்து

மௌனக் கொக்கியில்

தொங்கவிட்ட பின்

எழுந்து

பறக்கின்றன

பசித்த வாடையோடு

ஆயிரம் நினைவுகள்..!

Tuesday, February 8, 2011

வாழ்க்கை

நொடியில் தவறிவிடும் பேருந்து

கனவு முடியும் முன்

களைந்து விடும் தூக்கம் ,

வேறொருவரின் கையில்

நாம் விரும்பிய பரிசுப்பொருள் ,

எடுப்பதற்குள் ஓய்ந்துவிடும்

அலைபேசியின் அழைப்பு ,

நினைவுக்கு வரும் முன்

போக்குவரத்தில் மறைந்து விடும்

எங்கேயோ பார்த்த முகம்

வாழ்கை தான் எவ்வளவு நிச்சயமற்றது ....

இரகசியம்

ஒரு நண்பகலின்

ஆழ்ந்த மௌனத்தில்

உணர்ந்தேன் ...

பிரபஞ்ச இரகசியங்களின்

திறவுகோல்

காலடியில் மிதிபட்டு

காய்ந்த சருகுகள்

ஏற்படுத்தும் ஓசைக்கும்

நிசப்ததிற்கும்

இடையில்

ஒளித்து வைக்கப்பட்டிருப்பதை ......